அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது…

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.  இதையடுத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.  இதனையடுத்து இந்த ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

முன்னதாக டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரி  மனுத் தாக்கல் செய்தார்.  அந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும் இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து,  இடைக்கால ஜாமின் ஜுன் 1ம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜுன் 2 அன்று மீண்டும் திகார் சிறைக்கு சென்றார். முன்னதாக அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் பிரார்த்தனை நடத்தினார்.  அதன் பிறகு தனது கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார்.

இந்த நிலையில்,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்தது உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.