டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஆறு நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன்காரணமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பேருந்து, கால் நடையாகவே செல்லத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். மாநிலம் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்றிரவு முதல் 26 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

அதன்படி நேற்றிரவு 10 மணி முதல் டெல்லியில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இரவு முழுவதும் நீண்ட நேரம் காத்திருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.







