டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்றைய தினத்தில் மட்டும் 25,462 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்தினம் 24,375 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 167 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று இரவு முதல் அடுத்த திங்கள்கிழமை வரை 7 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கள் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“இப்போது ஊரடங்கை அறிவிக்காவிட்டால், பெறும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும். டெல்லி அரசு உங்கள் நலன் மீது அக்கரை கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இந்த கடின முடிவை எடுக்க வேண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக படுக்கை வசதி ஏற்படுத்த, இந்த 7 நாள் ஊரடங்கு உதவும். உங்களுக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் இதற்காக ஒட்டுமொத்த சுகாதாரத்துறை கட்டமைப்பே சிதைந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம். விரைவில் மீண்டு வருவோம்.’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டாம் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று இரவு தொடங்கும் 7 நாட்கள் ஊரடங்கு அடுத்த வாரம் திங்கள்கிழமை காலைவரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கின் போது, மளிகைக் கடை, காய்கறிக்கடை, உணவகங்கள், மருந்தகம், மருத்துவமனைகள், ஏடிஎம், வங்கிகள் உள்ளிட்டவை செயல்படும். மேலும் உணவு டெலிவரி மற்றும் பார்சல் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.