விடிய விடிய நடைபெற்ற டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் இடையேயான கடுமையான மோதலால் மாமன்றம் 6வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சியும், 104 இடங்களில் பாஜகவும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மாநகராட்சியை இழந்தது.
இதனையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்கு பின்னர் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம் மாமன்றத்தில் புயலை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் காரணமாக மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலில் டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள், “நியமன உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று அரசியலமைப்பு விதி மிகவும் தெளிவாக உள்ளது” என்று சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தனர்.
இதனையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் – போலீசார் குவிப்பு
இந்த உத்தரவைத் தொடர்ந்து டெல்லி மேயர் தேர்தல் பிப்ரவரி 22-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான 266 வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 34 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரேகா குப்தாவை வீழ்த்தி ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பின்போது கவுன்சிலர்களின் வாக்கெடுப்பு செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், இது ரகசிய வாக்கெடுப்பை மீறும் செயல் எனவும் கூறி பாஜக உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையும் படியுங்கள்: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்
மேலும், ஏற்கனவே நடந்த வாக்கெடுப்பை நிராகரித்துவிட்டு புதிய வாக்கெடுப்பை நடத்துமாறு முழக்கமிட்டனர். இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து முழக்கமிட்டதால் மாமன்றம் தொடர்ந்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. அதிகாலை மீண்டும் சபை கூடிய போது பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் பெண் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் 5-வது முறையும் மாமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 6-வது முறையாக மீண்டும் கூடிய மாமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவியதால் புதிய டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் மாமன்ற கூட்டத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
– யாழன்