#Delhi | சிறுவனின் உயிரை பறித்த ஏசி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

டெல்லியில் ஏசிக்கான அவுட்டோர் யூனிட் தலையில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி டோரிவாலன் பகுதியை சேர்ந்தவர் ஜிதேஷ் (வயது 18). இவரது நண்பர் பிரான்சு (17).  இவர் டெல்லி…

டெல்லியில் ஏசிக்கான அவுட்டோர் யூனிட் தலையில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி டோரிவாலன் பகுதியை சேர்ந்தவர் ஜிதேஷ் (வயது 18). இவரது நண்பர் பிரான்சு (17).  இவர் டெல்லி பட்டேல் நகரை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் நேற்று காலை பட்டேல் பகுதியில் சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர். ஜிதேஷ் ஸ்கூட்டரில் அமர்ந்து படி பிரான்சிடம் பேசி கொண்டிருந்தார். அதன்பிறகு ஜிதேஷ் நேரம் ஆகிவிட்டது எனக்கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

இதனையடுத்து பிரான்சு, ஜிதேசை கட்டியணைத்து வழியனுப்ப முயன்றார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த ஜிதேசை, பிரான்சு கட்டியணைத்து அவரை விட்டு விலகிய அடுத்தநொடி அருகில் இருந்த கட்டத்தின் 3-வது மாடியிலிருந்த ஏசிக்கான அவுட்டோர் யூனிட் ஜிதேசின் தலையில் விழுந்தது. இதில் ஜிதேஷ் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். அதேபோல் அருகே நின்ற பிரான்சும் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஜிதேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த பிரான்சுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேஷ்பாண்டு குப்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.