அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்க உள்ளதாக கூறினார். காந்திய வழியில் நடைபெறும் பயணம் இது என்று கூறிய கே.எஸ்.அழகிரி, செப்டம்பர் 7ம் தேதி காலை ராஜீவ் காந்தி நினைவிடம் சென்று அவரிடம் ஆசி பெற்று அதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாக கூறினார். 149 நாட்கள் 3600 கி.மீ தூரத்திற்கு ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவர் மகன் மருத்துவர் ஆவது போன்று, அரசியல் பின்புலம் உள்ள வாரிசுகள் அரசியலுக்கு தான் வர வேண்டும் என்று கூறி ராகுல்காந்தி அரசியலுக்கு வந்ததை கே.எஸ்.அழகிரி நியாயப்படுத்தினார்.
கண்ண பிரானைப்போல் புதிய அவதாரம் எடுத்து அரசியலில் ராகுல்காந்தி இனி பயணிப்பார் எனக் கூறிய கே.எஸ்.அழகிரி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை எடுத்துரைத்தார். தேசப்பற்று குறித்த பாஜகவினரின் கருத்துக்களுக்கு பதில் அளித்து பேசிய கே.எஸ். அழகிரி, ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்கிற எண்ணத்தை நாட்டில் ஏற்படுத்தியதே காங்கிரஸ்தான் எனக் கூறினார்.
இலவச திட்டங்கள் தவறு என்று பிரதமர் கூறுவது மிகவும் தவறான ஒன்று எனக் கூறிய கே.எஸ்.அழகிரி, விவசாயம், போன்ற துறைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் இலவசம் இல்லை, அதுவும் ஒருவகையான முதலீடு தான் என்றார். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கு செய்யப்படும் செலவு அத்தியாவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஒரு விவகாரத்தை எடுத்துவிட்டு, பாதியில் விட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் ஆழ்ந்த சிந்தனையோடும், பொறுப்புணர்ச்சியோடு தான் ஒவ்வொரு விவகாரத்திலும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பாஜக எண்ணிக்கை அளவில் வெற்றி பெற்று இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்.







