மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த சரளபதி பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை இரு மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் அப்பகுதிக்கு சென்றபோது உடனடியாக யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து அடுத்த 2 அல்லது 3 தினங்களில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என அவர் தெரிவித்தார். யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் நான்கு பேர் கொண்ட குழு வந்துள்ளதாகவும், , மேலும் டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, சுயம்பு, கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்னா யானையின் நடமாட்டத்தை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.







