மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத்தொடர்ந்து சுதந்திர தினம், வார விடுமுறையை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்டவை குறித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது. அதில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் தொடங்குகிறது.

முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.