தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவு; தலைவர்கள் இரங்கல்

உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்…

உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய வருமான தமிழ் கடவுள் நெல்லை கண்ணன் மறைவேதினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். தமிழ் கடவுள் நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த பழகுதர்க்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ் உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1560204292405227521

நெல்லை கண்ணன் மறைவு குறித்துப் பேசிய வைகோ எம்.பி, தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் எனவும், சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமயம், இலக்கியம், பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும் அவர் ஆற்றல் மிக்கவராக இருப்பார் எனக் கூறிய அவர், இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் பெரிய இழப்பாக உள்ளது அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன் எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன் காலமானார்; நாளை பிற்பகலில் இறுதிச்சடங்கு’

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“தமிழறிஞர்
நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது

சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்

யார் அவர்போல்
பேசவல்லார்?

அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?

ஏங்குகிறேன்;
இரங்குகிறேன்” எனத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அறிந்த நெல்லை கண்ணன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.