தெரியாமல் ஏதாவது விழுங்கிவிட்டீர்களா? அல்லது காதில் சில பொருட்களை உங்கள் குழந்தைகள் போட்டுக்கொண்டதா? அல்லது தொண்டையில் முள் குத்திவிட்டதா? எதுவாக இருந்தாலும் வருகிறது ஸ்லைம் ரோபா … சிட்டி ரோபோவா ரஜினியை பார்த்திருப்பீங்க? அது என்ன ஸ்லைம் ரோபோ என்கிறீர்களா? வாங்க படிப்போம்…
மருத்துவ உலகில் அண்மைக் காலமாக பயன்படுத்தப்படும் ரோபோக்கள் அந்தத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சிகிச்சையை எளிதாக்கி, கால விரயத்தை தவிர்த்து வருகிறது. மருத்துவ துறைசார் உபகரணங்களாக மட்டுமின்றி, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கும் அவை பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவ ரோபோக்கள் நோயாளிகள் நலன் காக்க உயர்தர சிகிச்சை, சிகிச்சை நடைமுறைகள், பாதுகாப்பான பணி சூழல் ஆகியவற்றுக்கு பெரிதும் பயன்படுகின்றன.
ஆண்டுக்கு 52 லட்சம் பேரை பலிகொடுக்கும் இந்தியா
தவறான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்ளிட்டவற்றின் காரணமாக, இந்தியாவில் ஆண்டுக்கு 52 லட்சம் பேர் மரணமடைவதாக ஹார்வர்ட் பல்கலைக கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. முறையான பயிற்சி, தொழில்நுட்ப பயன்பாடு, மனிதத் தவறுகளைக் குறைத்தாலே இந்த எண்ணிக்கையை பாதியாக்கிவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். வளர்ந்த நாடான அமெரிக்ககாவில், தவறான சிகிச்சையால் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேர் மரணத்தை தழுவுவதாக ஹோப்கின்ஸ் ஆய்வு அறிக்கை கூறுகிறது. தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் அவற்றைப் போக்கி, நிச்சயம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். இதன் காரணமாகவே மருத்துவ வல்லுநர்கள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை, நவீன மருத்துவ உபகரணங்களை, ரோபோக்களைப் பயன்படுத்துவதை துறைசார் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹாங்காங் பல்கலைக்கழகம் புதிய முயற்சி
இந்தநேரத்தில் தான், நம் வீட்டில் குழந்தைகள் வைத்து விளையாடும் ஸ்லைம் போன்ற பொருட்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ உலகில் புரட்சியை உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகம் (Chinese University of Hong Kong), காந்தத்தைப்பயன்படுத்தி ஸ்லைம் ரோபோ (Magnetic Slime Robot)ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அதனை மருத்துவ சிகிச்சை முறையில் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.
மேக்னடிக் ஸ்லைம் ரோபோ!
தங்களுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ள ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கவனக்குறைவால் விழுங்கிய பொருட்களை, இந்த மேக்னடிக் ஸ்லைம் ரோபோக்களைக் கொண்டு எளிதாக அகற்ற முடியும் என்று சொல்கிறார்கள். இந்த மேக்னடிக் ஸ்லைம் ரோபோக்களை உடலுக்கு வெளியே, காந்தங்களை வைத்துக்கொண்டு இயக்கலாம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். தேவைக்கு ஏற்ப உடலின் நரம்புகளில் கூட செல்லும் அளவுக்கு இந்த மேக்னடிக் ஸ்லைம் ரோபோவை பயன்படுத்தலாம் என்பது குறித்து செயல்முறை விளக்கமும் அவர்கள் அளித்துள்ளனர்.
மருத்துவ உலகில் மாயாஜாலம் செய்யுமா ஸ்லைம் ரோபோ?
தண்ணீரில் கரையக்கூடிய பாலிவினைல் அல்கஹால் (PVA-Polyvinyl Alcohol), போராக்ஸ், நியோடிமியம் (Neodymium Magnet) காந்தத் துகள்களைக் கொண்டு இந்த மேக்னடிக் ஸ்லைம் ரோபோ தயாரிக்கப்படுகிறது. இவற்றை இணைத்து செய்யப்படும் ஸ்லைம் ரோபோ, அதற்கு கொடுக்கப்படும் வேகத்தைப் பொருத்து, அது நீர்மமாகவும், தனிமமாகவும் செயல்படும். அதுமட்டுமின்றி, நியூட்டனின் விதிகளுக்கு மாறாக செயல்படும் (Non Newtonian Fluid) திரவத்தைக் கொண்டு இந்த ஸ்லைம் ரோபோ உருவாக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வெளியில் இருந்து காந்த சக்தியால் அதனை இயக்க முடியும் என்று சீன பல்கலைக்கழக பேராசிரியரும், இணை ஆராய்ச்சியாளருமான லி சாங் (Li Zhang) குறிப்பிடுகிறார். இது அடிப்படையான ஆராய்ச்சிதான என்றும், இதனை இன்னும் மேம்படுத்தும் பணிகளும் ஆராய்ச்சிகளும் தொடர்வதாகவும் லி சாங் சொல்கிறார்.
உங்களின் அடுத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்லைம் ரோபோ?
ஹாங்காங்கின் சீன பல்கலைக்கழகத்தின் மேக்னடிக் ஸ்லைம் ரோபாட் முயற்சியை எப்படி மருத்துவத் துறையில் பயன்படுத்துவது, அதனை இன்னும் எப்படி மேம்படுத்துவது என்றும் ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் தொடர உள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது பயன்படுத்தும் காந்தவியல் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத மேக்னடிக் ஸ்லைம் ரோபோவை உருவாக்குவது பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வில் இறங்கியுள்ளனர்.
-ஜெயகார்த்தி
Twitter ID: https://twitter.com/jayakaarthi









