மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு ஏர்டெல் நிறுவனம் பாராட்டு

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் சிறப்பாக மேற்கொண்டதாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ஏர்டெல்…

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு நடைமுறையை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் சிறப்பாக மேற்கொண்டதாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் பங்கேற்று ஒதுக்கீட்டைப் பெற்றது.

இதற்காக ஏர்டெல் நிறுவனம் செலுத்த வேண்டிய பாக்கி தொகை ரூ. 8,312.4 கோடியை அந்நிறுவனம் நேற்று செலுத்தியது. இத்தொகையை செலுத்த 4 ஆண்டு கால அவகாசம் உள்ள நிலையில், முன்கூட்டியே அந்நிறுவனம் பணத்தை செலுத்தி உள்ளது.

இந்நிலையில், 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

அதில், மத்திய தொலைத்தொடர்பு துறையுடனான தனது 30 ஆண்டு கால நேரடி அனுபவத்தில் தற்போதுதான் முதன்முறையாக சிறந்த சேவை அணுகுமுறையை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கீட்டைப் பெறுவதில் பிரச்னை இல்லை, அதிகாரிகளை பின்தொடர்வது இல்லை, அலுவலக தாழ்வாரங்களைச் சுற்றி ஓடுவது இல்லை, அவரைத் தெரியும்; இவரைத் தெரியும் எனும் உரிமைகோரல்கள் இல்லை என தெரிவித்துள்ள சுனில் பார்தி மிட்டல், தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வியக்கவைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மாற்றங்கள் நாட்டை வளர்ச்சி அடைந்த நாட்டாக நிச்சயம் மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்புத் துறையின் உயர் மட்டத்தில் சரியான நபர்கள் இருப்பதால், அத்துறையுடன் வணிகம் செய்வது மிக எளிதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகியவை பங்கேற்றன. இதில், ரிலையன்ஸ் ஜியோ அதிக தொகை கொடுத்து அதிக அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.