ராமநாதபுரம் சிறுமி உயிரிழப்பு: குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் – பிரேமலதா வலியுறுத்தல்…!

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சிறுமி தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாரா, அல்லது யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனரா, அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, வீட்டில் பாதுகாப்பாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கே இந்த நிலை ஏற்பட்டால், பாதுகாப்பைத் தேடி மக்கள் எங்கு செல்வது?

எத்தனை ‘சிங்கப்பெண்’ திட்டங்கள் இருந்தாலும், காவல்துறை இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லையே என்று மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு நிரந்தரமான தீர்வு எப்போது கிடைக்கும்?.

இந்தச் சம்பவம் குறித்து உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்”

என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.