தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி – அடுத்த வாரம் அறிமுகமாக வாய்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் செயலி, அடுத்த வாரம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத்…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் செயலி, அடுத்த வாரம் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பிப்ரவரியில் கட்சி தொடங்கியதும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரோ என சந்தேகங்கள் எழுந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.

இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு என சமீபத்தில் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த உறுப்பினர் சேர்க்கை தொடர்பான செயல்பாடுகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், செயலியில் தங்கள் ஆதார் எண் மற்றும் புகைப்படத்தை கொடுத்து உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் ஒவ்வொரு மாவட்ட தலைவரும் இந்த செயலியில், அவர்களின் எண்ணை பதிவு செய்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.