விழுப்புரம் சிவலோகநாதர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

திருமுண்டீச்சரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின்…

திருமுண்டீச்சரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், 230-வது தலமாகவும், நடுநாட்டுத் தலங்களில் 19-வது தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் சிவலோகநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.

இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட இத்தலமானது கி.பி.943ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது. வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு சிவபெருமான் திருநீற்றுப்பை (பொக்களம்) தந்தார். இதனால் கல்வெட்டுகளில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும், ஆற்றுத்தளி பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் சிவலோகநாதர் குறிக்கப்படுகின்றார்.

இந்த கோயிலின் தொன்மை விளக்கும் செய்திகள் பல கல்வெட்டுகளில் உள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற சிவலோகநாதர் திருக்கோயில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து
கோயிலின் கருவறையின் பின்புறம் உள்ள கல்லில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டினை
ஆளுநர் பார்வையிட்டு பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். ஆளுநர் ரவி கோயிலில் சாமி தரிசனம் செய்ததை முன்னிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

– அ. செளமியா அப்பர்சுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.