திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், எவ.வேலு உள்ளிட்டோரும் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, தனக்கு 90 வது வயது என்ற அடையாளம் வந்தாலும் கூட என்றைக்கும் ஒரே கொள்கை என்ற அடிப்படையில் தந்தை பெரியாரின் தொண்டனாக வாழ்ந்து வருவதாக கூறினார். சமூகநீதிக்கு சனாதன கும்பலால் மிகப் பெரிய சவால் விடப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்க்கவும் திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக என்றைக்கும் இருப்போம் எனவும் வீரமணி தெரிவித்தார்.
சமூகநீதி மண்ணை, காவி மயமாக்க முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளை தடுத்து நிறுத்துவதே தன்னுடைய முதல் பணியாக இருக்கும் எனவும் அவர் கூறினார். 10 சதவிகித இட ஒதுக்கீடு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் என பல்வேறு கொடுமைகள் நடந்து வருவதாகவும் அதனை எதிர்த்து தமிழக அரசு சட்டரீதியாக போராட்டம் நடத்தினாலும் மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் கீ.வீரமணி தெரிவித்தார்








