தமிழ்நாட்டில் ஊரடங்கா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும்…

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்றது. இவர்களுடன் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன் மற்றும் தங்கம் தென்னரசு இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய மா.சுப்பிரமணியன், கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருந்தபோது, பொருளாதாரத்தைக் காப்பாற்றி வளர்ச்சியைக் காட்டியது தமிழ்நாடு மட்டும்தான். இலங்கைக்கு எப்படி தமிழக தொழில் துறை உதவியதோ அதேபோல் கொரோனா தடுப்பூசி போட CSR நிதி மூலம் தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றார்.

மேலும், கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும். தமிழகத்தில் நேற்று வரை 2,662 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. எனவே தற்போதைய நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை. ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.