கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஓய்வுபெற்றார் ராவுல் காஸ்ட்ரோ!

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாகக் கியூபா புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். கியூபாவின் சர்வாதிகாரியாக இருந்த பாடிஸ்டுடாவின் பிடியில் கியூபா மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில்…

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாகக் கியூபா புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ரால் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் சர்வாதிகாரியாக இருந்த பாடிஸ்டுடாவின் பிடியில் கியூபா மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில் கியூபா புரட்சியின் தந்தை என போற்றப்படும் பிடல் காஸ்ட்ரோ, சர்வதேச புரட்சியாளர் சேகுவேரா, ராவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 81 பேர் அடங்கிய புரட்சி குழுவினர் 1956-ம் ஆண்டு 12 பேர் மட்டும் பயணிக்கக்கூடிய ‘கிரான்மா’ எனும் சிறிய படகில் கியூபா புரட்சி பயணத்தைத் தொடங்கினார்கள்.

இந்த புரட்சி குழுவினர் அடுத்த இரண்டு ஆண்டு சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சியை எதிர்த்து கியூபா மக்களின் ஆதரவுடன் கொரில்லா போரில் ஈடுபட்டனர். பின்னர் 1959-ம் ஆண்டு புரட்சியில் வெற்றிபெற்று பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபராகவும், கட்சியின் தலைமை உறுப்பினராகவும் 2008-ம் ஆண்டுவரை செயல்பட்டார்.

பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்த 2006-ம் ஆண்டு ராவுல் காஸ்ட்ரோ தற்காலிகமாக கியூபா அதிபராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2008-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ராவுல் காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வுச் செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

ராவுல் காஸ்ட்ரோ அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை கியூபா அதிபராக இரண்டு முறை பதவி வகித்தார். அவர் அதிபராக இருந்தபோதுதான் அன்றைய அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கியூபா நாட்டிற்கு சென்றார். இதன்மூலம் கியூபாவுக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என அழைக்கப்பட்டார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார தடைகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது.

ராவுல் காஸ்ட்ரோவின் அதிபர் பதவி 2018-ம் ஆண்டு முடிந்த நிலையில் மிகேல் டயஸ் கேனலை கியூபாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டுவருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் பொது குழுவில் ராவுல் காஸ்ட்ரோ கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து பேசிய, நான் எனக்கு வழங்கப்பட்ட இலக்கை மனநிறைவுடன் முடித்துவிட்டதாக நினைக்கிறேன். இனி நாம் தந்தை நாட்டின் மண்ணை எதிர்கால தலைமுறையினரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கிறேன். அவர்கள் ஏகாதிபத்திய தாக்குதலிலிருந்து கியூபாவை காப்பதில் பேரார்வம் கொண்டவர்களாக உள்ளனர்” என அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.