நடப்பு ஐபிஎல் போட்டி தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி நுழைந்துள்ளது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி, கடந்த வந்த பாதையை தற்போது பார்க்கலாம்…
நடப்பு ஐபிஎல் போட்டியுடன் தோனி ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. எனவே, கோப்பையை வென்று, வெற்றிமுகத்துடன் தோனி விடைபெற வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த கனவுடன் தொடங்கியது இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி. அதில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்கொண்டது. ருதுராஜ் கெய்க்வாட்டின் ருத்ர தாண்டவம் எதிரணியின் பவுலிங் ஸ்குவார்டுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தாலும், போட்டியின் முடிவு சிஎஸ்கே-வுக்கு எதிராக அமைந்தது.
எனினும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடத் தொடங்கியது சிஎஸ்கே… மஞ்சள் படை விளையாடும் மைதானங்கள் எல்லாம் சென்னை அணியின் ரசிகர்களால் அதிர தொடங்கின. குஜராத்தில் தோல்வியுற்ற சென்னை அணியை ஆறத்தழுவி வரவேற்றனர் சென்னை ரசிகர்கள். 3 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை சொந்த மண்ணில் பார்க்க ஆவலாக காத்திருந்தனர். ருதுராஜுடன் கைகோர்த்த டெவன் கான்வே, பவர்பிளே ஓவர்களில் லக்னோ அணியை தெரிக்கவிட்டு, 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற காரணமாகினர்.
அதே கொதிப்புடன் மும்பை விஜயம் செய்த சிஎஸ்கே, வான்கடே மைதானத்திலேயே, மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. வெற்றி களிப்போடு சென்னைக்கு திரும்பிய சிஎஸ்கே-வுக்கு, சஞ்சு சாம்சனின் சைலெண்ட் கில்லர் ஒரு சர்ப்ரைஸ் தோல்வியை கொடுத்தது மட்டுமல்லாமல், நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், தீபக் சகாரின் தொடர் காயங்கள் சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது.
கிங் கோலியின் ராஜாங்கமான பெங்களூருக்கு புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள், சின்னசாமி மைதானத்தின் நாலா பக்கங்களையும் பவுண்டரிகளால் பதம் பார்த்தனர். கடைசி ஓவர் வரை கியூரியாசிட்டிக்கு பஞ்சமில்லாமல் வைத்திருந்த மேக்ஸ்வெல், டூ பிளசி ஜோடி ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் மாட்ட, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே.
வெற்றி முகத்துடன் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சென்ற மஞ்சள் படை, 235 ரன்கள் குவித்து, இந்த ஐபிஎல் தொடரிலேயே ஒரு அணியின் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. அந்த வெற்றிக்கு பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணியுடன் தோல்வியை சந்தித்தது தோனி அண்ட் கோ. சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பை வலுப்படுத்தும் போட்டியாக பார்க்கப்பட்ட லக்னோ அணியுடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து மீண்டும் மும்பை இந்தியன்ஸை சந்தித்த சிஎஸ்கே, 13 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் மும்பையை வென்று சாதனை படைத்தது.
அடுத்ததாக டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணிக்கு காத்திருந்தது செக் மேட். பிளே ஆஃப் ரேசில் குஜராத், லக்னோ, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என அனைவருக்கும் வாய்ப்பு இருந்ததால், சென்னை சந்திக்க இருந்த கடைசி 2 போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா அணியை சொந்த மண்ணில் எதிர்கொண்ட சென்னைக்கு, அதன் இறுதி போட்டியை வாழ்வா சாவா போட்டியாக மாற்றியது கொல்கத்தா அணி.
இறுதி லீக் ஆட்டத்தில் நிச்சயம் வென்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்றிருந்த நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி. ருதுராஜ் மற்றும் கான்வே ஜோடி சிஎஸ்கே ஆதிக்கத்தை அடிக்கல் நாட்ட 223 ரன்கள் சேர்த்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவை சிதறடித்தாலும், மற்றொரு புறம் டெல்லியின் நம்பிக்கை விக்கெட்டுகளை வசியப்படுத்திய தீபக் சகார், மஹீசா தீக்சனா, பதிரானா டெல்லியின் ஓட்டத்தை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ரன் ரேட் விகிதத்தில் இரண்டாம் இடம் பிடிக்க செய்தனர். இதன்மூலம் குவாலிஃபயர் 1-வது ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ள மீண்டும் சென்னைக்கு படையெடுத்துள்ளது சிஎஸ்கே அணி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடாத அணியாக குஜராத் இருந்தாலும், சென்னை விக்கெட்டுகள் குஜராத் வீரர்களுக்கு அவ்வளவு சவாலானதாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 70 சதவிகிதம் டாஸ் வெல்லும் அணியே சென்னையில் வெற்றி வாகை சூட வாய்ப்பு இருப்பதால், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தேர்வு செய்த பின்னர், குஜராத் அணியை சுருட்டும் யோசனையே கேப்டன் கூலுக்கு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதே சமயம் சென்னை அணியின் பேட்டிங்கை உடைக்க தகுந்த பவுலிங் ஸ்குவாடை வைத்திருக்கும் பாண்டியா அண்ட் கோ, சிஎஸ்கே-வுக்கு டஃப் கொடுக்கும். ஆக மொத்தம் சென்னை ரசிகர்களுக்கு, குவாலிஃபயர் போட்டி நல்ல விருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை….
– நந்தா நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்








