பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், தனக்கு வழங்கப்பட்ட சேவை வரி தொடர்பான தீர்ப்புக்கு எதிராக, மீண்டும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், வரும் 27-ம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில், தெறி திரைப்படத்தின் தீம் இசை போன்றே இசை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு, தெறி திரைப்படம் போன்று மீண்டும் இசை அமைக்க முடியாது எனவும், அதைத் தாண்டி இசை அமைக்க வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜி.வி பிரகாஷ், 2006 தொடங்கியது தனது இசைப்பயணம், விரைவில் நூறு படங்களை தாண்ட உள்ள நிலையில், இந்த லைவ் இன் கான்சர்ட் நிகழ்ச்சியை நடத்துவதாகவும், கோவையில் முதன் முதலாக தனது லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி தொடங்குவது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இதுவரை ரெக்கார்டிங் அறையில் இருந்து பதிவு செய்த பாடல்களை நேரடியாக ரசிகர்கள் முன்பு பர்பாம் செய்வது தனி உணர்வாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த லைவ் இன் கான்சர்ட் நிகழ்ச்சிக்கான டிக்கெட் ரூ.299 முதல் ரூ.50000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறிய அவர், சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்க கூடிய அளவில் இந்த நிகழ்ச்சி அமையும் எனவும், சிறந்த ஒலி அமைப்புகளை கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தொடர்பான கேள்விக்கு, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் படம் குறித்து செல்வராகவன் தன்னிடம் பேசி இருப்பதாக கூறினார். இந்த இசை நிகழ்ச்சியில் 40 முதல் 45 பாடல்கள் பாட உள்ளதாகவும், ஆர்டிஸ்டாக இப்படித்தான் படம் செய்ய வேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது உற்சாகத்தை தந்திருக்கிறது என தெரிவித்தார். இதை தொடர்ந்து, இசையமைப்பாளர் சேவை வரி விதிப்பு விவகாரம் குறித்து ஜி.வி.பிரகாஷ்-யிடம் கேட்டபோது, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.








