கிரிப்டோகரன்சி ‘பான்சி ஸ்கீம்’ போன்று மோசமானது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாகும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற சில நாடுகளில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ளது. சீனா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி குறித்து மக்களிடைய இரு வேறு கருத்துக்கள் இருந்து வருகிறது. ஒரு தரப்பினர் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவாகவும் அது நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் எனவும் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரிப்டோகரன்சியால் இந்திய பணத்தின் மதிப்பு குறையும் எனவும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு பாதிக்கப்படும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோகரன்சியால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான ரபி சங்கர் கிரிப்டோகரன்சியை தடை செய்வதே நல்லது எனவும் இதில் மாற்றங்கள் கொண்டுவருவது பயனளிக்காது எனவும் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் கிரிப்டோகரன்சி ‘பான்சி ஸ்கீமை’ விட ஆபத்தானது என கூறியுள்ளார். பான்சி ஸ்கீம் என்பது ஒரு நிறுவனத்திற்காக உறுப்பினர்களை சேர்த்தால் சலுகைகள் கிடைக்கும் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுவது ஆகும்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் 30 சதவிகிதம் வரி விதிக்கப்படும் மற்றும் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







