வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் கரையைக் கடந்தது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை கரையை கடந்தது. இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-65 கிமீ வேகத்திலும், மன்னார் வளைகுடா, கொமோரின் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40-60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், கடல் சீற்றமாக காணப்படும் என்பதாலும், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







