தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…

பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அந்த வகையில் திருவாரூர், நாகை, மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை என்ன? முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? என்பது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில், நியூஸ் 7 தமிழின் களஆய்வில் விவசாயிகள் தெரிவித்ததாவது:  மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்களின் மொத்த பரப்பளவு 1,48,300 ஹெக்டேர். இதுவரை 54,000 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. கனமழையால் 23,200 ஹெக்டேர் (58,000ஏக்கர்) பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுளள்ன. மாவட்டம் முழுவதும் 26,000 ஹெக்டேர் உளுந்து பயிரிட்டதில் 20,080 ஹெக்டேர் பாதிப்படைத்துள்ளது.1,300 ஹெக்டேர் பரப்பளவில் கடலை பயிரிட்டதில் 1,225 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. 320 ஹெக்டேர் பரப்பளவில் எள் பயிரிட்டதில் 41 ஹெக்டேர் பாதிப்படைந்துள்ளது. 32 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிட்டதில் 23 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, அறுவடை செய்த நெல்மணிகளை நிபந்தனையின்றி கொள்முதல் செய்யவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை பகுதி விவசாயிகள் தெரிவித்ததாவது: பருவம் தவறி பெய்த மழையால் இதுவரை 15,546 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துளளது. ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்து நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை திருப்தி அளிக்கவில்லை.

இதனால் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்யவும் அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழையால் 15,516 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. 5,000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அதனால் அரசு 33,000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

பாதிப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து, விவசாய கமிட்டி கூறுவதை அரசு அமல்படுத்தினால் உதவியாக இருக்கும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வில், பருவம் தவறி பெய்த மழையால் 27,817 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அரசு அறிவித்தருக்கும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. பதிப்படைந்துள்ள நெற்பயிர்களை மீட்டெடுப்பதற்கான 50 சதவிகிதம் மானியம் தவிர்த்து, மொத்த செலவினங்ளையும் அரசே ஏற்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணிக்கு உடனடியா மாவட்ட அளவிலான அதிகாரம் பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இடம்பெறும் ஒரு குழுவை அமைக்க, வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பயிர் நிவாரண தொகையே இன்னும் 3,000 பேருக்கு வழங்கப்படாமல் உள்ளது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.