’உதயநிதி பற்றிய விமர்சனங்கள், அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள்’ – அமைச்சர் பெரியகருப்பன்

உதயநிதி அமைச்சரானதற்கு எழும் விமர்சனங்கள், அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 கோடியே 95 லட்சம் ரூபாய்…

உதயநிதி அமைச்சரானதற்கு எழும் விமர்சனங்கள், அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அமைச்சரவை என்பது ஒரு கூட்டு பொறுப்பு. முதலமைச்சருக்கு அதை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தாலும், இப்பொழுது ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், கிராமப்புற
மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்காகவும் இந்த துறையை முதலமைச்சர் தந்துள்ளார் என்பதை நன்றி பொறுப்போடு ஏற்று கொள்கிறேன்” என்று பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அரசியலில் திறமையும் தகுதியும் உள்ள வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. வெறும் வாரிசு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது. உதயநிதி அமைச்சரானதற்கு எழும் விமர்சனங்கள், அரசியலில் வாரிசு இல்லாதவர்களின் புலம்பல்கள்.

அமைச்சரவையில் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. அரசியல் ஜாம்பவான்களான கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழ்நிலையில், எந்தவித சேதாரமும் இல்லாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக இயக்கமும், தமிழக அரசும் சிறப்பாக செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.