பஞ்சாபில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் தகனம் – திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெயராஜ் ரத்தினம் தம்பதியின் மகன் யோகேஷ் குமார். இவர்…

உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தில் வசிக்கும்
ஜெயராஜ் ரத்தினம் தம்பதியின் மகன் யோகேஷ் குமார். இவர் கடந்த 2020ம் ஆண்டு
ராணுவ பணியில் சேர்ந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார். அவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வந்த இராணுவத்தினர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டிக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். ரெங்கநாதர் கோவில் மைதானத்தில் கூடியிருந்த கிராம மக்களின் சார்பாக மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவரது இல்லத்தில் வைத்து அவரின் உடலுக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை அவரது உடலை அவர்களது சமுதாய முறைப்படி உறவினர்கள் நல்லடக்கம் செய்ய தயாரான போது, உரிய ராணுவ மரியாதை இல்லாததால் ராணுவ மரியாதை வழங்கும் வரை இறுதி நல்லடக்கம் செய்யமாட்டோம் எனக் கூறி உறவினர்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ராணுவ வாகனத்தில் வைத்து உடல் உயிரிழந்த ராணுவ வீரர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சமுதாய முறைப்படி உயிரிழந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் அவரின் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.