முக்கியச் செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2012-13 கல்வி ஆண்டிற்குப் பிறகு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்தே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதை அதிமுக அரசு புறக்கணித்து வந்துள்ளதை தெரிந்துகொள்ள முடியும். கடந்த 10 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நியமனம் இல்லாததால் வேதனையில் இருந்த இளைஞர்கள், திமுக அரசு இந்த காலி பணியிடங்களை நிரப்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, கொரோனா பேரிடருக்குப் பின்னால் தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் கூடுதலான ஆசிரியர்களை நியமிப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், மீண்டும் மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமான வகையில் பாதிக்கப்படும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பல்லாயிரக்கணக்கானோர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் உடனடியாக நியமிக்க முடியும். அதுபோல முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப முடியும்.

எனவே, தற்போது தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

G SaravanaKumar

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வீடியோ – தமிழ்நாடு விவசாயிகள் கொந்தளிப்பு

Dinesh A

முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன

Web Editor