இன்றைக்கு போதைப் பழக்கம்… என்பது ஏதோ ஒரு வகையில் பெரும்பாலானோரிடம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். உற்சாகம், மன நிம்மதியைத் தரும் பொருளாக எண்ணி போதைப் பொருளுக்கு இன்று பலரும் அடிமையாகியுள்ளனர். ஆரம்பத்தில் ஒருமுறை பயன்படுத்துவதால் உற்சாகத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள் நாள்பட நாள்பட அதற்கு அடிமைப்படுத்திவிடும். போதைப் பழக்கத்திற்கு ஆட்படுபவர்கள் பின்னர் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர்.
போதைப் பழக்கத்திற்கு பலரும் அடிமையாகியிருப்பதற்கு மதுக் கடைகளுக்கு முன் நிற்கும் நீண்ட வரிசையும், பெட்டிக் கடைகளில் சிகரெட்டும் கையுமாக நிற்பவர்களுமே சாட்சி. போதைப் பொருள்களான சிகரெட், மது, புகையிலைப் பொருள்கள் அனைத்துமே இன்றைக்கு மிக எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. தற்போது பள்ளிப் பருவத்திலேயே போதைப் பழக்கத்தை தொடங்கிவிடுகின்றனர். இந்தப் பழக்கம் நம்மை மட்டுமல்லாமல் நம் சமூகத்தையும் பாழாக்கிவிடும். போதைப் பழக்கத்தில் இருந்து வெளியேற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. நல்ல உணவுப் பழக்க வழக்கம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையின் மூலம் இதைக் கைவிட முடியும்.
போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்:
- போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று முழு மனதோடு நினைத்தாலே அந்தப் பழக்கத்தை விட்டுவிடலாம்.
- போதைப் பழக்கத்தைத் தூண்டும் விதமான சூழ்நிலை, நண்பர்கள், இடம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
- அடிக்கடி முகம், வாய், உதடுகள், பற்களை கண்ணாடியின் முன் நின்று பார்க்க வேண்டும். அப்போது, போதைப் பொருள்கள் எப்படியெல்லாம் முகத் தோற்றைத்தைக் குலைக்கிறது என்பதை உணர முடியும்.
- இந்தப் பழக்கத்தினால் நம்முடைய பணம் எவ்வளவு செலவாகிறது. அது பொருளாதார ரீதியாக எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
- போதைப் பொருள் பயன்படுத்த வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடலாம். அல்லது சுவிங்கம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடலாம்.
- போதைப் பழக்கத்தை முதலில் கைவிடும்போது உடல் சோர்வு, தூக்கமின்மை, எரிச்சல் போன்றவை ஏற்படும். அப்போது, இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களைப் பருகலாம்.
- ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ளலாம்.
- ஜிம், யோகாசனம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- இசை கேட்பது, நடனம் ஆடுவது அல்லது ஏதாவது ஒரு பயிற்சியில் சேர்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
-ம.பவித்ரா





