திருப்பதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையினால் நேரிட்ட வெள்ளப்பெருக்கில், ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை காரணமாகத் திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நிலச்சரிவினால் சேதமடைந்த இடங்கள் சீரமைக்கப்பட்டு இன்று காலை மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
மேலும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் திடீர் அருவிகள் உருவாகியுள்ளன. திருப்பதி சொர்ணமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல் திருப்பதி நகரின் வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.







