கொரோனாவை கட்டுப் படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று, மக்களை கடும் பாதிப்புக்கு ஆளாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் ஆக்சிஜனுக்கும், தடுப்பூசிகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோ டெக் (HLL Biotech)நிறுவனம் மூலமும், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனத்தின் மூலமும் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம், நாளொன்றுக்கு ஆயிரத்து 50 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்திச் செய்ய முடியும் என்றும், இது ஒட்டு மொத்த தமிழகத்தின் உற்பத்தித் திறனான 400 மெட்ரிக் டன்னைவிட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆலையை தமிழக அரசே ஏற்று ஆக்சிஜனை ஏன் உற்பத்தி செய்யக் கூடாது என்ற கேள்வியை உச்ச நீதிமன்றமும் எழுப்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கொரோனா தொற்று பாதிப்பு முடியும் வரை, அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்யலாம் என்று கூறியுள்ளார்.
கொரோனாவை கட்டுப் படுத்துவது, ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்ட குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டி, ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் இரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.







