கொரோனா தடுப்பூசி விவகாரம் தொடர்பாக முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். விவேக் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி காரணமாகவே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனால் கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது சென்னை மாநகராட்சி புகார் அளித்தது. இதன் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அதில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும் அவர் கூறினார். இந்த வழக்கு நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால், புதிய மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.







