கடைசி சில வினாடிகள்…ரோலர் ஸ்கேட்டிங்கில் புதிய சாதனை படைத்த ஆண்ட்ரியா வெலிங்டன்

இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் தற்போது அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். 8 வயதான ஆண்ட்ரியா வெலிங்டன், சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார். தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 3 தங்கப்…

இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் தற்போது அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். 8 வயதான ஆண்ட்ரியா வெலிங்டன், சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார். தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றதுதான் இவர் பெயர் பிரபலமாக காரணமாகியுள்ளது.


ஏப்ரல் மாத தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 58-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 500 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 500 மீட்டர் சாலை போட்டிகளில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்ற ஆண்ட்ரியா மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.


மொஹாலியில் அதிகாலை நேரத்தில் பயங்கர குளிராகவும் பகல் நேரத்தில் கடும் வெயிலாகவும் இருந்த சீதோஷ்ண நிலை ஆண்ட்ரியாவுக்கு ஒத்துவரவில்லை. சென்னை கிளைமேட்டில் பயிற்சி பெற்ற ஆண்ட்ரியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்றே எதிர்பார்க்கவில்லை. பெற்றோர் பிரவின் சாம் வெலிங்டன் – மிஸ்பா வெலிங்டன் மற்றும் பயிற்சியாளர்கள் கொடுத்த உத்வேகத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஆண்ட்ரியா.


8 போட்டியாளர்கள் பங்கேற்ற 1,000 மீட்டர் இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரியா எளிதில் வெற்றி பெற்றார். ஆனால், தலா 4 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்ற 500 மீட்டர் ரிங் மற்றும் சாலை போட்டிகளில் தொடக்கத்திலேயே பின்தங்கி விட்டார். கடைசி சில வினாடிகளில் கிடைத்த சிறிய இடைவெளியில் புகுந்து முன்னேறி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார் ஆண்ட்ரியா.

இதுவரை நடைபெற்ற தேசிய போட்டிகளில் மூன்று பிரிவுகளில் தங்கம் பதக்கங்களை யாரும் வென்றதில்லை. 500 மீட்டர், 1000 மீட்டர் மற்றும் 500 மீட்டர் சாலை போட்டிகளில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்று முன்னோடியாகியிருக்கிறார் ஆண்ட்ரியா.


சென்னை போரூரை அடுத்த கிருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சத்யா ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஆண்ட்ரியா, “எந்தப் போட்டியாக இருந்தாலும் போட்டியின் இறுதி எல்லை வரை போராடும் குணம் பெற்றவர்” என அவரின் திறமையை வெகுவாகப் பாராட்டுகிறார் முதன்மைப் பயிற்சியாளர் சத்யமூர்த்தி.


ஆண்ட்ரியாவின் தாயார் மிஸ்பா குடும்பத் தலைவி. குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் காட்டினால் உடல் நலத்துக்கு நல்லது என எல்லா பெற்றோரையும் போலத்தான் ஆண்ட்ரியாவின் தாயார் மிஸ்பா வெலிங்டனும் நினைத்து, ஆண்ட்ரியாவை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சேர்த்து விட்டிருக்கிறார். ஆனால், தங்களுக்கு பெருமை சேர்க்கும் உச்சத்துக்கு ஆண்ட்ரியா உயர்வார் என அவரின் பெற்றோரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.


தனியார் வங்கியில் பணிபுரியும் ஆண்ட்ரியாவின் தந்தை பிரவின் சாம் வெலிங்டன், தனது மகளின் கனவுகளில் தலையிடுவதில்லை என்கிறார். ஆண்ட்ரியா விரும்பும் வரை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டை தொடர நாங்கள் உறுதுணையாக இருப்போம், எதையும் திணிக்க மாட்டோம் என்கின்றனர் பிரவின் சாம் வெலிங்டன் – மிஸ்பா தம்பதியினர்.


6 வயதில் விளையாட்டாய் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டைத் தொடங்கிய ஆண்ட்ரியா, இரண்டே ஆண்டுகளில் தேசியப் போட்டியில் தங்கம் வென்று சாதித்திருக்கிறார். இதுவரை 25 தங்கம் 6 வெள்ளி 3 வெண்கல பதக்கங்களை வென்று விளையாட்டில் கெட்டிக்காரியாய் சுழலும் ஆண்ட்ரியா படிப்பிலும் படுசுட்டிதான்.பெற்றோர் அளிக்கும் ஊக்கத்தால் ஆண்ட்ரியா ஒலிம்பிக் ரிங்-கைத் தொடும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.