கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பரவல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழக அரசு கேட்ட நிலையில் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மட்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் மத்திய அரசு திணறுவது மட்டுமின்றி மாநில அரசுகளை கிள்ளுக்கீரைகளாக நினைக்கும் போக்குடன் நடந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், நேற்றுவரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா, கொரோனா பாதிப்பு முக்கியமாக தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.
மேலும், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது. அதற்குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்ற அவர், தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தனியார், அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடு இல்லாமல் – எங்கும் போதிய அளவில் கிடைத்திடச் செய்வது ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் தமிழக அரசு எடுத்திட வேண்டும் எனவும் கூறினார்.







