எட்டு மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிக்க இன்று முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
குற்றாலத்தில் சீசன் மாதங்களான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டில் சாரல் மழை பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இதை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள். பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சீசனை அனுபவித்து செல்வது வழக்கம்.
கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை சபரிமலை செல்லும் பக்தர்களும் குற்றாலத்தில் குளித்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அருவிக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் பஞ்சாயத்து ஊழியர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து பயணிகளை குளிக்க அனுமதிக்கிறார்கள். இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தான் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.







