மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாசை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி, மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி, மாரிதாஸ் மீது, அப்துல் மீரான் என்பவர் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில், புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாரிதாசை மீண்டும் கைது செய்தனர். இவ்வழக்கில், மாரிதாசை, வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








