விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி, மதம் அற்றவர்கள் என ஒரு தம்பதியர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35 ). பட்டதாரி இளைஞரான இவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி வட்டார அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை இப்படி சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறி உள்ளனர். அப்போது கார்த்திகேயன் இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர். இதுபோலவே தனது 2 குழந்தைகளுக்கும் சாதி – மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.