கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கூடுதலாக 56 போலீசார் நியமித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதில் மாணவி சந்தேக மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலவரம் 3 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் விசாரிக்கும் புலனாய்வு பிரிவில் மேலும் 56 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 56 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 56 பேரும் கலவரம் தொடர்பாக 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.








