அக்னிபாத்: பிரதமர் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை – ராகுல்காந்தி சாடல்

அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி ஆய்வகத்தின் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள்…

அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடி ஆய்வகத்தின் புதிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. மேலும் இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 

அதேநேரத்தில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவம் மற்றும் கடற்படை, விமானப்படை ஆகிய துறைகளில் சேருவதற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோல், ராணுவம் மற்றும் விமானப்படைகளில் சேருவதற்கும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது.

இந்நிலையில், அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வரிசையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அக்னிபாத் திட்டம் பிரதமர் மோடியின் ஆய்வகத்தின் புதிய பரிசோதனை என குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், அக்னிபாத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதில், 3 ஆயிரம் பேர் மட்டுமே அரசு வேலைகளில் சேருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த திட்டத்தின் கீழ் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் 4 ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என சாடியுள்ள அவர், இந்த பரிசோதனை மூலம் நாட்டின் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்துக்குள்ளாகும் என விமர்சித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.