இ.பி.எஸ். டெல்லி பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா ?

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா ? பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்காமல் திரும்பியதற்கான காரணம் என்ன ? அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் தமிழக அரசியலின் சமீபத்திய…

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா ? பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்காமல் திரும்பியதற்கான காரணம் என்ன ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் தமிழக அரசியலின் சமீபத்திய விவாத பொருளாக மாறியிருக்கிறது. அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் டெல்லி பயணம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி உற்சாகமாக புறப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அதிமுகவின் ஒற்றை தலைமையாக அதுவும் சக்தி வாய்ந்த தலைவராக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தலைவர்களிடம் நேரம் ஒதுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்பது, புதிய குடியரசு தலைவரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துவது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து தமிழகத்தின் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து மனு அளிப்பது உள்ளிட்ட நீண்ட நிகழ்ச்சி நிரல்கள் எடப்பாடி பழனிசாமி சார்பாக தயார் செய்யப்பட்டன. ஆனால் நிகழ்ச்சி நிரல்களின் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் இறுதிவரை தொடரவில்லை. ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார நிகழ்வில் திட்டமிட்டபடி கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து நடந்தேறிய நிகழ்வுகள் பாதகமாகவே அமைந்தன.

பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்களை நேரடியாக சந்தித்து பேச கோரப்பட்டிருந்த நேரம் ஒதுக்கப்படவில்லை. அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. உற்சாகத்துடன் டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது முதல் ஏமாற்றமாக அமைந்தது. புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்வுக்கு பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருப்பதால் நேரம் ஒதுக்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவர்கள் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அதிமுகவினர் இல்லை.

காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு, உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள், கட்சத்தீவு மீட்பு, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தீர்வு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்காமலே திரும்ப கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் டெல்லியில் தன் செல்வாக்கை நிரூபிக்க சென்ற எடப்பாடி பழனிசாமி, மனுவை கூட வழங்க முடியாமல் திரும்புவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.

பணிச்சுமை, அடுத்தடுத்த நிகழ்வுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடியவில்லை என பாஜக தலைவர்கள் பலர் கூறினாலும், ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக சந்திக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் சந்திக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாக கூறப்படுவதே அதற்கான காரணமும் கூட.

வரும் 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க தமிழகம் வரும் பிரதமரை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க உள்ளனர். அப்போது சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருந்தாலும், ஒற்றைத் தலைமை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதிமுக யார் வசம் இருக்கப்போகிறது என்பது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்க, தமிழகம் வரும் மோடி எடப்பாடி பழனிசாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் தனித்தனியே சந்திக்க போகிறாரா? அல்லது இணைந்து சந்தித்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறாரா? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.