தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாகோப் ஜூமா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடையதாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட குப்தா சகோதரர்கள் இருவரை துபாய் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க அதிபராக ஜாகோப் ஜூமா பதவி வகித்து வந்தார். அப்போது அரசுடன் சில ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக குப்தா சகோதரர்கள் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, ஜூமா தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதேநேரம், குப்தா சகோதரர்களான அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா துபாய்க்கு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, துபாய் போலீஸாரின் உதவியை தென்னாப்பிரிக்கா நாடியது. இந்நிலையில், துபாய் போலீஸார் இருவரையும் நேற்று கைது செய்தனர். இதனை தென்னா்பிரிக்க போலீஸாரும் உறுதிப்படுத்தினர்.
-மணிகண்டன்








