போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!

சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க, 320 மருத்துவர்கள் நாள்தோறும் வீடு தேடி செல்ல இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை…

சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க, 320 மருத்துவர்கள் நாள்தோறும் வீடு தேடி செல்ல இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா 2ம் அலை காரணமாக , கடந்த ஆண்டை விட, சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் 20 சதவீத அளவிற்கு, பரிசோதனையின்போது தொற்று உறுதி செய்யப்படுவதாகவும், அவர் கூறினார்.

சென்னையில் தற்போது 33,500 பேர் சிகிச்சையில் உள்ளதாக கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர், அதில் மூன்றாயிரத்து 500-லிருந்து 4 ஆயிரம் பேர் வரை, உயர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் , இன்று அமலுக்கு வர வாய்ப்பு இல்லை, என்று கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை எனத் தெரிவித்தார். அதே நேரம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும், என்றும் அவர் கூறினார். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.