முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!


எல்.ரேணுகா தேவி

கட்டுரையாளர்

கொரோனா நோய் தொற்று காலத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை இந்தியாவில் பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் 864 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ கழகத்தின் இணையத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மருத்துவர்களுக்கு உதவும் வகையில் ‘IMA – COVID Martyrs Fund’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் இந்த ஆண்டு மட்டும் 126 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் அதிகம்

தமிழ்நாடு,மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகளவு நிகழ்ந்துள்ளது. 4“தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 86 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-வது அலையில் இந்த ஆண்டு உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டுவருவதாக” இந்திய மருத்துவ கழகத்தின் தமிழ்நாடு கிளை செயலாளர் ரவிக்குமார் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். மருத்துவத்தை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்காமல் மக்களுக்கு செய்யும் சேவை என நினைத்து பணியாற்றியவர் மருத்துவர் சண்முகப்பிரியா. திருமணமாகி நான்கு ஆண்டு கழித்து கருவுற்றிருந்த அவர் தன் உடல் நலனைவிடத் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு பணியாற்றுவதே அவசர அவசியம் என கருதினார்.

4 கர்ப்பிணி மருத்துவர்கள் உயிரிழப்பு

ஆனால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். சண்முகப்பிரியாவைப் போல் நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர்களின் எண்ணிக்கை நான்கு என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் சாந்தி.

இது குறித்து நியூஸ் 7 தொலைக்காட்சியிடம் பேசிய அவர்,“சேலம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்து விலக்கு அளிக்க மருத்துவமனை முடிவுச் செய்துள்ளது.

மருத்துவர் சண்முகப்பிரியா

இதுபோன்ற நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் கர்ப்பிணி மருத்துவர்கள், மருத்துவ முன்கள பணியாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பணி விலக்கு அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

அதேபோல் சர்வதேச மகப்பேறு மருத்துவர்கள் சங்கம், தேசிய மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக உடல் பருமன், இதய பிரச்சனை போன்ற இணை நோய் உள்ளவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டு கொள்ளும் உரிமை வழங்கவேண்டும். ஏனென்றால் முதல் கொரோனா அலையைவிட தற்போதுள்ள 2-வது கொரோனா அலையில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது” என அவர் கூறினார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 28,869 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 236 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 7,130 பேருக்கு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியில்லாமல் ஏராளமான நோயாளிகள் அவதிப்படுகிறார்கள்.

சிகிச்சைக்காக நோயாளிகள் அவதிப்படுவதுபோல் ஒவ்வொரு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ முன்கள பணியாளர்கள் அவதிப்படுகிறார்கள்.

காற்றோட்டம் இல்லாத கவச உடையை 12 மணிநேரத்திற்கு மேல் அணிந்துகொண்டு உணவருந்தவோ, கழிவறைக்குச் செல்லவோ கூட அவர்களால் முடியவில்லை. தங்களுடைய உடல் ஆரோக்கியத்தைவிட தங்களை நம்பி வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவே மறைந்த மருத்துவர் சண்முகப்பிரியா போன்ற ஏராளமான மருத்துவர்கள் களத்தில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கான தரமான பாதுகாப்பு உடை, ஆரோக்கியமான உணவு, கொரேனா சிகிச்சைக்கு பிறகு தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை உத்தரவாதப்படுத்துவது கொரோனாவுக்கு எதிராக மக்களைக் காக்கும் கேடயம் என்பதை அரசும், பொதுமக்களும் உணர்வது அவசியமாகும்.

Advertisement:
SHARE

Related posts

சைக்கிள் பயணம்…இளநீர் விற்கும் பாட்டியிடம் அன்புருக பேச்சு…மக்களின் முதலமைச்சர் ஸ்டாலின்

Vandhana

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

Ezhilarasan

தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Halley karthi