கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜப்பான் பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவல் பரவ தொடங்கி சுமார் 2 வருடத்திற்கும் மேலாகியும் உலக நாடுகளில் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் உலக நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்ததோடு, பொருளாதார நெருக்கடியும், சுகாதார நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்த நிலைமை தற்போது மாறி உலகம் முழுவதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதற்கிடையில் ஜப்பான் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
https://twitter.com/narendramodi/status/1561316612577251328
தற்போது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் “எனது நண்பர் ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







