கோவையில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர், பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச் சீட்டை வழங்கியதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து தளர்வுகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் சென்றது.
பேருந்தில், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது, நடத்துநர் எச்சில் தொட்டு வழங்கி யுள்ளார். இதைப் பார்த்த பயணிகள், கொரோனா காலகட்டத்தில் இதுபோல எச்சில் தொட்டு கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து அதை போலவே செய்துள்ளார்.
இதனால் பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். பேருந்து திருப்பூர் வந்தடையும் முன்பே அங்கு கொரோனா பரிசோதனை செய்பவர்களுடன் சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
பேருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும் அந்த நடத்துநருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொரோனா காலங்களில் நடத்துநர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.







