கொரோனா தொற்று முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இறப்பு விகிதமும் முதல் அலையைக்
காட்டிலும் 2வது அலையின்போது அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“கர்ப்பிணி பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்களிடையே கொரோனா தொற்று அறிகுறிகள் முதல் அலையை விட இரண்டாவது அலையில் 14.2 சதவீதத்தில் இருந்து 28.7 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும், “கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்களினிடையே கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம், முதல் அலையில் 0.7 சதவீதம். ஆனால் தற்போது இரண்டாவது அலையின்போது, அது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.” என்று அந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.
“இரு அலைகளின் போதும் மகப்பேறு இறப்புகளின் எண்ணிக்கை 2 சதவீதம் ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் கோவிட் 19 நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தனர்” என்றும் கூறியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றை தவிர்க்க கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையமும் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







