முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி!

முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த ஊரடங்கில் எது எதற்கு அனுமதி என்பது பற்றி அரசு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு, 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம், பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும். தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும். உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.

பொதுமக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணி வரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மால்கள் திறந்திட அனுமதி கிடையாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ஊரடங்கின்போது வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: காவல் துறை!

Ezhilarasan

வனவிலங்கு குற்றவியல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கோரிய வழக்கு; பிப். தள்ளி வைப்பு!

Niruban Chakkaaravarthi

தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்து காத்துள்ளனர்: டிடிவி தினகரன்

Saravana