கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. இன்னமும் நம்மை கொரோனா துரத்தி கொண்டு தான் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 27-வது இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு, 108 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறையில் இளங்கலை மட்டுமன்றி கூடுதல் படிப்புகளையும் தொடர்ச்சியாக படித்தால் தான் இதில் சாதிக்க முடியும். முழுமையாக படித்தால் தான் சமூகத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. உலக சுகாதார நிறுவன நிபுணர் செளமியா சாமிநாதன் தெரிவித்தபடி, உலகில் இனிமேல் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளுடன் தான் வாழ வேண்டும். கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. இன்னமும் கொரோனா நம்மை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. 2019-ம் ஆண்டு தொடங்கி கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளுடன் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 3-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற மாணவர்களை முதலமைச்சர் சந்தித்து பாராட்ட உள்ளார். 28 மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பங்கேற்கிறார்கள்.75 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சேலம் அரசு மருத்துவக் கல்லூரி தற்போது 100 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை 250-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கூடுதலாக மருத்துவ உள் கட்டமைப்பு, பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகளவு அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் 34 கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் 10,425 மருத்துவர்கள் தங்களது மருத்துவப்படிப்பை நிறைவு செய்கிறார்கள். சேலம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோன்று எம்.எம்.சி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் அமைக்கப்படும். ரூ.ஒரு கோடி மதிப்பில் கட்டணப் படுக்கைகள் பிரிவு தொடங்கப்படும். பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஹீமோபீலியா தினசரி சிகிச்சை தொடங்கப்படும். டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன உபகரணங்கள் வாங்கப்படும். விரைவில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் விரைவில் டெலிமெடிசன் பிரிவு தொடங்கப்படும் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.