பொதுக்குழு கூட்டம்; ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு காரசார வாதம்

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பு நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு…

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

ஓபிஎஸ் தரப்பு

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது எனவும், அந்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் அனுமதிக்க முடியாது எனவும் கூறப்பட்டது,

பொதுக்குழுவிற்கான அஜெண்டாவை தற்போது வரை வெளியிடவில்லை எனவும், கட்சியினரிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒற்றை தலைமையை கொண்டு வரும் வகையில் விதிகளை திருத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவினை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஒபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்டுங்கள் பார்ப்போம் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்றும் அவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.எனவே நாளை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இபிஎஸ் தரப்பு

இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது என வாதிடப்பட்டது.
எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும் எனக் கூறப்பட்டது.
பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும்,
பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியுள்ளதாகக் கூறிய இபிஎஸ் தரப்பு, அதிமுக விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தது.அதிமுக விதிகளில் நாளை திருத்தம் நடப்பதும் நடக்காமல் இருப்பதும் பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் எனக் கூறிய இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என முன் கூட்டியே முடிவு செய்ய முடியாது எனக் கூறியது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்தது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.