கொரோனா தொற்றுக்குப் பிறகு, 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நியூரோ பவுண்டேஷன் அமைப்பு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சில், நியூரோ பவுண்டேஷன் நிர்வாக இயக்குநரும், நரம்பியல் நிபுணருமான ஆர். நடராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பக்கவாதம் தற்போது 4 பேரில் ஒருவருக்கு வருவதாகவும், இந்தியாவில், தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மலேரியா, காச நோயை விட பக்கவாதத்தால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாகவும், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் 2 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும், 50 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடுவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும், பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோர் அடுத்த 4 மணி நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் பாதிப்பின்றி மீட்டு விடலாம் என்றும் அவர் கூறினார்.
இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்காக அவ்வப்போது இதயப் பரிசோதனை செய்துகொள்வது போல, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் சி.பிரபாகரன், டி.நிஷா மோள், ஜெ.ஏ.வசந்தகுமார், எஸ்.பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








