புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 60 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், ஏனாமில் 6 நபர்களுக்கும், மாஹேவில் 2 நபர்களுக்கும் என மொத்தம் 80 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 304 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,64,172 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,66,438 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா







