கர்நாடகா தேர்தல் : முதற்கட்டமாக 189 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  முதற்கட்டமாக 189பேர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  முதற்கட்டமாக 189பேர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

எனினும் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடித்தன.  வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜகவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று பாஜக வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கர்நாடக பாஜக கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவின் பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

100 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 189 வேட்பாளர்களில் 52 புதுமுகங்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது.  அதேபோல  189 வேட்பாளர்களில்  8 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஷிக்கான் தொகுதியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிட உள்ளார். மேலும் சிக்மங்ளூர் தொகுதியில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி டி வி ரவி போட்டியிடுகிறார். அதேபோல ஷிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறார். கனக்புரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி கே சிவக்குமார் எதிர்த்து அமைச்சர் அசோக் போட்டியிடுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.