கொரோனா பரவல் எதிரொலியால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தினமும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக்கட்டுப்படுத்துவதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது ஜூன் 7ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடம் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், ஹோட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், அரசு அதிகாரிகளின் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாளைமுதல் வரும் ஜூன் 7-ம் தேதி வரை ஹோட்டல் கடைகள் அடைக்கபடுவதாக ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்கு அனைத்து ஹேட்டல்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







